தமிழ்நாடு

சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2023-10-15 10:22 GMT   |   Update On 2023-10-15 10:22 GMT
  • சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டு 29 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.
  • தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த சவன் என்பவரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை:

சுங்கத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், உணவக உதவியாளர், எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில், புளுடூத் டிவைசர், எலக்ட்ரிக்கல் சாதன பொருட்களை பயன்படுத்தி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்களின் செயல் சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.

சுங்கத்துறை அலுவலகத்தில் கேண்டீன் உதவியாளர், கிளர்க், சமையலர், எழுத்தர், கார் ஓட்டுநர்கள் உள்பட 17 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, சுங்கத்துறை இணையத்தில் முறையான அறிவிப்பு வெளியானது இதற்கான தகுதி 18 வயது முதல் 25 வயது உச்ச வரம்பும், 10 வகுப்பு, டிப்ளமா, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வி தகுதியும், 50 மதிப்பெண்கள் ஒருமணி நேர தேர்வாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், இதற்கான எழுத்து தேர்வு துவங்கிய 15 நிமிடத்தில், சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட லேசான சந்தேகத்தால், தேர்வர்களை சோதனை செய்ததில், அதிர வைக்கும் சம்பவமாக காதின் உள்புறமாக புளுடூத், உடலில் எலக்ட்ரானிக் டிவைஸ் போன்ற சாதனங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, அதிரடியில் இறங்கிய சுங்கத்துறை தேர்வு மைய அதிகாரிகள், ஒவ்வொருவராக சோதனையிட்டதில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மற்றொருவரையும் மொத்தம் 30 பேர் எலக்ட்ரானிக் சாதனங்களை உடலில் பொருத்தியபடி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து, கேள்விக்கான பதிலை அளித்தவர்கள் யார்? என்பதை அறிய, சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டு 29 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் சிங்க் என்ற செயலி மூலம் இவர்களை தொடர்பு கொண்டு பேசி இருப்பவர்கள் யார் என்று தெரிந்து உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தேர்வில் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சர்வின் (வயது 22) என்பதற்கு பதிலாக சவன் (22) என்பவர் தேர்வில் போட்டோ, முகம், ஹால் டிக்கெட் போன்றவற்றை மாற்றி ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இவர் சர்வினின் உறவினர் ஆவார். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த சவன் என்பவரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 28 பேரை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

Tags:    

Similar News