சொத்துக்குவிப்பு வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
- பல்லப் சின்ஹா, தான் பணியில் இருந்த ஓராண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.
- பல்லப் சின்ஹா தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201.38 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள், முகவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் லஞ்சம் பெற்றது குறித்து கடந்த 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், விமான நிலைய சுங்க பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பல்லப் சின்ஹாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்லப் சின்ஹா, தான் பணியில் இருந்த ஓராண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து பல்லப் சின்ஹா, அவரது மனைவி ரீனா சின்ஹா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஐகோர்ட்டு உத்தரவின்படி, ரீனா சின்ஹா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பல்லப் சின்ஹா மீதான வழக்கு மட்டும், சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதால், இதுபோன்ற வழக்குகளில் கருணை காட்ட முடியாது. பல்லப் சின்ஹா தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201.38 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.