கன்னியாகுமரி கடலில் சடலமாக மிதந்தவர்: 5 நாட்களுக்கு பிறகு அடையாளம் தெரிந்தது
- கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.
- கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் கடந்த 1-ந்தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் யார்? என்று அடையாளம் தெரியாததால் அங்கு உள்ள குளிரூட்டப்பட்ட பிண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? என்பது பற்றி 5 நாட்களுக்கு பிறகு நேற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சின்ன அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) என்பதும், அவர் பழையபொருட்கள் விற்கும் ஆக்கர் வியாபாரி என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும், இதனால் அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் சின்னமாத்தூர் அருளானந்தம் நகர் பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக கன்னியாகுமரி கட லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் இந்த தகவல் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் காணாமல் போனது குறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.