தூத்துக்குடியில் இ-சேவை மையம், ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- வியாபாரி கைது
- மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார்.
- ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் பகுதி தலைவராக இருந்து வருகிறார். இருவரது மகன் சரவணபிரபு (வயது 29). இவர் திருச்செந்தூர் பிரதான சாலை முத்தையாபுரத்தில் இ-சேவை மையம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டல் பக்கத்தில் கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது. இவருக்கும், சரவண பிரபுவுக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷேக்முகமது, நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு கடையின் முன்பு இருந்த விறகுகளில் பட்டு தீப்பற்றி எரிந்து அணைந்தது. இதனால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக சரவணபிரபு அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஷேக்முகமது, தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்புவதும், அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசுவதும் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.