தமிழ்நாடு

F4 பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் மரணம்- ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Published On 2024-08-31 17:04 GMT   |   Update On 2024-08-31 17:04 GMT
  • பார்முதலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது.

முன்னதாக இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கார்பந்தய பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் உயிரிழந்தார்.

இந்நிலையில், பணியின்போது உயிரிழந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News