தமிழ்நாடு
குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
- வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
- சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவிகள் ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் நேற்று பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
இருப்பினும், வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.