மழையால் அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சி தோல்வி- உணவாக பலாப்பழம், அரிசி வழங்கி கண்காணிப்பு
- அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
- யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.
அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.
நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.
மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.
தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.
யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.
சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.