தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகையையொட்டி கோடிக்கணக்கில் இனிப்பு, ஜவுளி விற்பனை- பட்டாசு விலை 40 சதவீதம் உயர்வு

Published On 2022-10-20 10:46 GMT   |   Update On 2022-10-20 10:46 GMT
  • தீபாவளிக்காகவே இனிப்பு கடைகளில் ஏராளமான இனிப்பு வகைகளை செய்து வைத்துள்ளார்கள்.
  • பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் மனதில் பட்டென்று நினைவுக்கு வருவது இனிப்பு பலகாரங்கள், பட்டாசு, புத்தாடை இந்த மூன்றும்தான்.

தீபாவளி தினத்தன்று இரண்டு நாள்களுக்கு முன்பே வீடுகளில் அதிரசம், பணியாரம், முறுக்கு உட்பட விதவிதமான பலகாரங்களை செய்ய தொடங்குவார்கள். நெய் மற்றும் எண்ணெய் வாசனை மூக்கை துளைக்கும்.

பலகாரங்களை விரும்பி அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கு வயிற்று கோளாறுகளும் ஏற்படும். அதற்காக கடைகளில் தீபாவளி லேகியம் தனியாக விற்கப்படும்.

இப்போது கிராமங்களில் ஒருசிலர் பலகாரங்களை செய்தாலும் 90 சதவீதம் பேர் வீடுகளில் பலகாரம் செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் வேலைப்பளு மற்றும் இந்த தலைமுறையினருக்கு பலகாரங்கள் தயாரிக்கும் முறையே தெரிவதில்லை.

கடைகளில் விரும்பிய இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிட்டு பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள். தீபாவளிக்காகவே இனிப்பு கடைகளில் ஏராளமான இனிப்பு வகைகளை செய்து வைத்துள்ளார்கள். ஒரு கிலோ முறுக்கு குறைந்தபட் சம் ரூ.160 முதல் கடைகளுக்கு ஏற்ப விற்கிறது.

சென்னை அடையார் ஆனந்த பவனில் தீபாவளிக்காக முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் 100 கிராம் வீதம் 12 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.900.

இனிப்பு வகைகள் ரூ.650 முதல் ரூ.1400 வரை உள்ளது. இனிப்பு வகைகளை விட உலர் பழங்கள் வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கிப்ட் பாக்ஸ் இனிப்பு வகைகள் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனைக்கு வந்துள்ளது.

ஜவுளிக்கடைகளில் இந்த ஆண்டு ஜவுளிகள் விற்பனை அதிகரித்து உள்ளன. தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

ஜெயச்சந்திரன் ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தர் கூறியதாவது:-

கடந்த ஆண்டைவிட 20 சதவீதத்துக்கும் மேல் ஜவுளி விற்பனை அதிகரித்து உள்ளது.

தீபாவளி என்றாலே பெண்கள் சேலைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான ஏராளம் சேலை ரகங்கள் மார்க்கெட்டுக்கு வந்து குவிந்துள்ளன. இதனால் அவர்களும் விரும்பி வாங்கி செல்கிறார்கள்.

இளைய தலைமுறையின் ஜீன்ஸ்பேன்ட் மற்றும் வெஸ்டர்ன் மாடல் உடைகளை அதிக அளவில் வாங்குகிறார்கள் என்றார்.

பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.

கடந்த ஆண்டைவிட 40 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. சிறுவர்களை கவரும் வகையில் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிராகன்பிளை மற்றும் புதிய வகை மத்தாப்பு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரவெடிகளுக்கு தடையிருப்பதால் உற்பத்தி மிக மிக குறைந்து விட்டது.

ஜவுளி, பட்டாசு, இனிப்பு ஆகிய 3 வகைகளின் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதால் கோடிக்கணக்கில் விற்பனை யாகும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News