தமிழ்நாடு (Tamil Nadu)

அடித்து நொறுக்கப்பட்ட தனியார் நிறுவன பஸ் - விபத்தில் உயிரிழந்த குமார் - கணேஷ்

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: 10 பஸ்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

Published On 2024-09-21 07:10 GMT   |   Update On 2024-09-21 07:10 GMT
  • மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
  • விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் மோதி ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பொதுமக்கள் 10 பஸ்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலாவதி. இவர் போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நண்பர்களான குமாரும், கணேசும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர்.

ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

அப்போது குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கெலமங்கலம் கூட்ரோடு வழியாக வந்தபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே காயமடைந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தவிர்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது கிராம மக்கள் கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையில் வேகத்தடை இல்லாததும், டாடா தனியார் கம்பெனி பேருந்துகள் அதிவேகமாக செல்வதும் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் இந்த கம்பெனி பஸ்கள் இதுபோன்று ஏராளமான விபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் மற்றும் ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் சிக்கிய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்

முன்னதாக தனியார் நிறுவன வாகனங்களில் வந்த ஊழியர்களை போலீசார் பத்திரமாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போடிச்சிபள்ளி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News