சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 12 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் தொழிற்சாலை சம்பந்தமாக, தொழிலாளர்கள் போராட்டம் சம்பந்தமாக, தீபாவளி போனஸ் சம்பந்தமாக உடனடியாக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு, சாம்சங் நிறுவனத்தின் சார்பில் ஒரு குழு, தொழிலாளர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.