காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய 78 வீடுகள் இடிப்பு
- வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
- காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.
இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.
ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.
இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.