தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் துணை முதலமைச்சர்

Published On 2024-10-19 04:34 GMT   |   Update On 2024-10-19 04:34 GMT
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
  • கள்ளக்குறிச்சி துருகம் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் துப்புரவு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.

தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது கலெக்டர் வளாகத்தை சுத்தம் செய்தல், நுழைவு வாயில் கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சாலையை சீரமைத்தல், சாலை தடுப்பு கட்டைகளில் வர்ணம் தீட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி துருகம் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் துப்புரவு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துணை முதலமைச்சரான பின் கள்ளக்குறிச்சிக்கு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வருவதால் அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News