நெல்லையப்பர் கோவில் யானைக்கு காலணி வழங்கிய பக்தர்கள்
- 52 வயதான காந்திமதி யானை தற்போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறது.
- காலணிகள் யானையின் கால்களில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படும்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் 'காந்திமதி' என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
நெல்லையப்பர் கோவிலின் ஆனித்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்களில் சுவாமி வீதிஉலாவின் போது காந்திமதி யானை முன் செல்வதோடு பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் 52 வயதான காந்திமதி யானை தற்போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறது. இதனால் சப்பர வீதி உலாவில் சேதமான சாலையில் செல்லும்போது பாதம் பாதிப்படைகிறது.
இதனையறிந்த சிவனடியார்கள் யானையின் மூட்டு வலியை குறைக்கவும், பாதத்தை பாதுகாக்கவும் எண்ணினர். இதைத்தொடர்ந்து யானையின் கால்களில் பொருத்துவதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட காலணிகளை பாகனிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக யானை பாகன் கூறும்போது, இந்த காலணிகள் யானையின் கால்களில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு திருவிழாக்களில் சுவாமி சப்பர வீதி உலாவின்போது யானைக்கு காலணிகள் பொருத்தப்படும் என்றார்.