கோவில் திருவிழாவில் பன்றிகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்த பக்தர்கள்
- 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
- 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.