தமிழ்நாடு

எடப்பாடிக்கு வருகை தந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2023-04-30 07:52 GMT   |   Update On 2023-04-30 07:52 GMT
  • ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
  • ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு.

சேலம்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்றைக்கு முடங்கி கிடக்கிறது. முதியோர் உதவி தொகை கூட பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள். தி.மு.க.பொறுப்பேற்ற பிறகு நம்முடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு பணிகளை கூட செயல்படுத்தப்படவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கணிக்கிறது.

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை கடும் கண்டனம் தெரிவித்தபின் அரசு வாபஸ் பெற்றது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆளுகிறார்.

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்.

ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?,

அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் 41 சதவீதம் ஆகும். நான் ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு பள்ளியில் படித்த 9 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை சிந்தித்து நான் நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.

ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த 564 பேர் இன்றைக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்கிறார்கள். மருத்துவ கல்வி கட்டணம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கமே கல்வி கட்டணம் செலுத்தும் என்று அறிவித்தேன் அதன்படி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. என்னை முதலமைச்சராக உருவாக்கியதும் எடப்பாடி சட்டமன்ற மக்களாகிய நீங்கள் தான். பொதுச் செயலாளரானதும் உங்களுடைய ஆதரவால் தான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News