தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்- திருமாவளவன்

Published On 2024-02-02 04:05 GMT   |   Update On 2024-02-02 04:05 GMT
  • 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
  • எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.

தஞ்சாவூர்:

தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.

பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News