புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக உண்ணாவிரத போராட்டம்
- மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.
இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.