சென்னையில் மாணவர்கள்- ஐ.டி. ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது
- தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
- போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தாம்பரம் பகுதியில் உள்ள சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது தெரியவந்தது. பின்பு சங்கர் நகர் போலீசார் மெரினா கடற்கரையில் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சூரியமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது கொடுங்கையூரை சேர்ந்த யூனுஸ் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தியும், சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.