நடுரோட்டில் படுத்து கிடந்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட போதை வாலிபர்
- நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வடகரை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது24).
இவர் நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருநீலக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை, திடீரென குடிபோதையில் ஆரோக்கியராஜ் தனது செல்போனில் படம் பிடித்தார்.
பின்னர் அவர் நீங்கள் குடித்து விட்டு பணி செய்கிறீர்கள் என ஏதேதோ ஆரோக்கியராஜ் உளறினார். தொடர்ந்து அவர் நடுரோட்டில் படுத்து கிடந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் திரண்டனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார். இதையடுத்து பழனிவேல் உதவிக்கு மேலும் 2 போலீசாரை அழைத்தார். அவர்களிடமும் ரோட்டில் படுத்து கிடந்தப்படியே தகராறில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து போதை ஆசாமி ஆரோக்கியராஜை போலீசார் அப்புறப்படுத்தி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.