தண்ணீர் வரத்து இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு- விவசாயிகள் கவலை
- தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
- இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.