பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு
- கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
போரூர்:
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-
சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.