பழனி கோவிலில் இன்று துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
- மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.
அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.