தமிழ்நாடு

நிலஅதிர்வு- வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2024-08-27 06:54 GMT   |   Update On 2024-08-27 06:54 GMT
  • வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.
  • பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த சத்தத்துடன் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் நில அதிர்வு ஏற்பட்டபோது கடையின் ஷட்டர், தகரம் சீட்டுகள் குலுங்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

திருப்பூர் காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்ட போது பல்வேறு வீடுகளில் பொருட்கள் நகர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் தங்களது பகுதியில் பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு, இயற்கையாகவே ஏற்பட்ட நில அதிர்வா? இல்லை கல்குவாரியில் பாறைகளை பெயர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடிச்சத்தமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

இதேப்போல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மாலை ஊரே குலுங்கும் வகையில் அதி பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தமானது சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உணர முடிந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்த வெடி சத்தமானது வானில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா? அல்லது தாராபுரம் அருகே புகளூர் பவர் கிரிட் நிறுவனத்தில் அதிக சக்தி கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களில் மின் அழுத்தத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமா? அல்லது நில அதிர்வு காரணமா? என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் விசாரித்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறை, வருவாய் துறை சார்பில் முறையான விளக்கம் பொது மக்களுக்கு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பயங்கர சத்தம் கேட்டதும் தாராபுரம் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த பொது மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர். தாராபுரம், மூலனூர், குண்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இரவு முழுவதும் பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர் .

இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,

தாராபுரம் நகர் பகுதியில் வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் மூன்று முறை தொடர்ச்சியாக கேட்டது. ஒரு நிமிடங்கள் வரை சத்தம் நீடித்தது.

இதுகுறித்து வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்களும் வெடிச்சத்தம் கேட்டது என தெரிவித்தனர். அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்களுக்கு எதனால் வெடிச்சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

மீண்டும் வெடிச்சத்தம் கேட்குமோ? என பயத்தில் உள்ளோம். இதய நோயாளிகள், பலவீனமானவர்கள் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வெடிச்சத்தம் பாதிப்பை ஏற்படுத்துமோ? என அச்சமாக உள்ளது. இரவில் நிலநடுக்கம் அல்லது கல் குவாரிகளில் ஆழ்துளையிட்டு வெடி வைக்கிறார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என அதிகாரிகள் விசாரித்து பொதுமக்களின் பதட்டத்தை போக்க வேண்டும். புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகர் மற்றும் தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட பயங்கர சத்தம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சூலூர் விமான படை தளத்தில் இருந்து பறக்கும் போர் விமானங்களால் அவ்வப்போது பயங்கர சத்தம் கேட்டது. நேற்று ஏற்பட்ட சத்தம் போர் விமானங்களால் ஏற்படவில்லை. எனவே அது குறித்து இன்று ஆய்வு செய்கிறோம். நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சத்தத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 2ஆக பதிவாகி உள்ளது. எனவே நில அதிர்வு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News