தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2024-03-21 03:16 GMT   |   Update On 2024-03-21 08:06 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

புதுக்கோட்டை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.

இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் 2021-ம் ஆண்டு இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.

ஊழல் தடுப்பு போலீசார் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலுப்பூரில் உள்ள வீடு உட்பட அவரது தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு ஆணங்களையும் பறிமுதல் செய்தனர்.

 

அமலாக்கத்துறையினர் வந்த கார்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள காட்சி - முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டு முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க.வினர்.

செப்டம்பர் மாதம் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News