தமிழ்நாடு

விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஜனாதிபதிக்கு தமிழக ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் கடிதம்

Published On 2024-01-03 03:29 GMT   |   Update On 2024-01-03 03:29 GMT
  • அமலாக்கத்துறை பா.ஜனதாவின் கைத்தடியாக, ஒரு அங்கமாக மாறியதை இந்த சம்பவம் காட்டுகிறது.
  • தமிழகத்தின் ஏழை விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் நிதி மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கமிஷனரகத்தில் துணை கமிஷனராக பதவி வகிப்பவர் பா.பாலமுருகன். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஏழை விவசாயிகள் கண்ணையன் (வயது 72), கிருஷ்ணன் (67) சேலம் மாவட்டம் ஆத்தூரில்6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்.

நிலத்தகராறு தொடர்பான சட்டப்பூர்வ மோதலில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரித்தேஷ்குமார் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி சம்மன் அனுப்பி உள்ளார். அதில் இந்த விவசாயிகளின் சாதியை குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்மனின்படி ரித்தேஷ் குமார் பண மோசடி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்.

அமலாக்கத்துறை பா.ஜனதாவின் கைத்தடியாக, ஒரு அங்கமாக மாறியதை இந்த சம்பவம் (சம்மன் அனுப்பிய விவகாரம்) காட்டுகிறது. தமிழகத்தின் ஏழை விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் நிதி மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் இந்த புகார் கடிதத்தின் நகல்களை துணை கமிஷனர் பாலமுருகன் அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News