தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதன்மூலம் திமுக-பாஜக உறவு வெட்ட வெளிச்சமாகியது: எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
- நாங்கள் பாஜக அணியில் இருந்தபோதுகூட பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 3 ஆண்டாக தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் இருந்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது.
தமிழ் தமிழ் என மூச்சுக்கு 300 முறை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.
கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அரசு சார்பில் முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக உள்ளது.
கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் தி.மு.க-பா.ஜ.க. உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?
டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.
நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோதுகூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என தெரிவித்தார்.