மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏன்?- கல்வித்துறை அமைச்சர் பதில்
- தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- மடிக்கணினிக்கு தேவையான ‘சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை.
சென்னை:
சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விவரங்களை பதிவேற்றம் செய்யும் நிதித்துறையின் இணையதளத்தில் பிரச்சினை இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து, தற்போது அவை சரிசெய்யப்பட்டு, அந்த இணையதளம் வழக்கம்போல் இயங்குகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது வழங்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில், 11 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியிருக்கிறது. மடிக்கணினிக்கு தேவையான 'சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை. இதனால் விரைவில் கொள்முதல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு தேவையான மடிக்கணினிகள் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.