தமிழ்நாடு (Tamil Nadu)
தனியார் திருமண மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்த காட்சி.

ஈரோட்டில் அனுமதியின்றி அ.தி.மு.க.வினர் ஆலோசனை நடத்திய திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் 'சீல்'

Published On 2023-02-09 07:30 GMT   |   Update On 2023-02-09 07:30 GMT
  • மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர்.
  • தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் ஒன்றாக திரண்டு இருந்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அனுமதியின்றி இங்கு கூட்டம் நடத்தக்கூடாது உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.

ஆனால் இதை ஏற்காமல் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் போலீசாரும் வந்திருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் அ.தி.மு.க.வினரை மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறினர். ஆனால் அவர்களுடனும் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அ.தி.மு.க.வினர் மண்டபத்தை விட்டு கலைந்து சென்றனர்.

ஏற்கனவே இதே மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர். அப்போதும் பறக்கும் படை அதிகாரிகள் வந்து அனுமதியின்றி கூட்டம் போடக்கூடாது என்று கூறி கலைந்து போக செய்தனர். தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மண்டபத்தில் இருந்த 2 நுழைவாயிலும் பூட்டி சீல் வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News