மின் கட்டண உயர்வு - விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
- சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்.
- சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் !
பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?
"சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!
மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.