டெங்கு கொசு ஒழிப்பு: தனியார் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
- திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
- தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.