5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்: குஷ்புவுக்கு நடிகை அம்பிகா கண்டனம்
- இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?
- பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, "தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார். இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?" என காட்டமாக பேசினார்.
மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்" என பதிவிட்டுள்ளார்.