3 நாட்கள் தாம்பரத்தில் விரைவு ரெயில்கள் நிற்காது- தெற்கு ரெயில்வே
- விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில் சேவையில் வருகிற 14-ந்தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் அங்கு மேம்பாட்டு பணிகள் மற்றும் நடைமேடைகள் விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில் சேவையில் வருகிற 14-ந்தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணிகள் மேலும் 3 நாட்களுக்கு நடைபெற இருப்பதால் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்பு பணிகள் காரணமாக வருகிற 15, 16, 17-ந்தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விரைவு ரெயில்களும் தாம்பரத்தில் நிற்காது. இதற்கு மாற்றாக விரைவு ரெயில்கள் அனைத்தும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக எழும்பூர் நோக்கி வரும் அனைத்து விரைவு ரெயில்களும் தாம்பரத்தில் நிற்காது. அதற்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில் தஞ்சாவூர், சிதம்பரம் வழியாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.