காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.
எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.