சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட நிதி நிறுவன ஊழியர் கைது
- ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ. மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பெண்கள் பலரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நேற்று இரவு குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.