தமிழ்நாடு

சொத்து ஆவணப்பதிவின் போது விரல் ரேகை ஒப்பீடு: போலி பதிவைத் தடுக்க புதிய வசதி தொடக்கம்

Published On 2024-06-21 04:30 GMT   |   Update On 2024-06-21 04:30 GMT
  • தவறான ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்பட்டு வருகின்றன.
  • சார் பதிவாளர் ஆவணப் பதிவின் உண்மை நிலையை விசாரித்து அதன் அடிப்படையில் பதிவு மேற்கொள்வார்.

சென்னை:

ஆவணப் பதிவின் போது போலிகளைத் தடுக்க விரல் ரேகை ஒப்பீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சொத்துக்களை பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த செய்திகள் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. மேலும் சொத்தை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் விரல் ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படலங்கள் ஒப்பிட்டு சரி பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் தவறான ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒரு நபர் சொத்தை விற்கும் போது தனது சொத்து விற்பனையை ஒத்துக் கொள்ளும் வகையில் சார் பதிவு அலுவலகத்தில் விரல் ரேகையைப் பதிவு செய்வார். அப்போது இதே சொத்து தொடர்பாக முந்தைய ஆவணப் பதிவின் போது சொத்தின் உரிமையாளர் செய்திருந்த விரல் ரேகைப் பதிவுடன் இப்போதுள்ள விரல் ரேகை ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

2 விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வகையில் கணினி மென் பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார் பதிவாளர் ஆவணப் பதிவின் உண்மை நிலையை விசாரித்து அதன் அடிப்படையில் பதிவு மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News