தமிழ்நாடு (Tamil Nadu)

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிச்சாமி

Published On 2024-07-09 08:51 GMT   |   Update On 2024-07-09 08:51 GMT
  • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
  • எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News