வரத்து குறைவால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு- பாறை மீன்கள் ரூ.550-க்கு விற்பனை
- மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
- பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.
பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.