தமிழ்நாடு

வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் வீடு புகுந்து பெண்ணை காரில் கடத்திய 5 பேர் கைது

Published On 2023-02-06 06:40 GMT   |   Update On 2023-02-06 06:40 GMT
  • கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது50). இவரது மகன் முத்து. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே ஒரு செங்கல் சூளை உரிமையாளரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் தாயும், மகனும் செங்கல் சூளையில் வேலை செய்து அந்த கடனை அடைத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து உடல் நிலை சீரானதும் மீண்டும் வேலைக்கு வருவதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.

அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை அடியாட்களுடன் பெரியாம்பட்டிக்கு வந்து உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டி காரில் லட்சுமியை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் முத்து நேற்று இரவு தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.

அப்போது புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காரில் பெண்ணை கடத்தி சென்றவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை மீட்டு அவரது மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை கடத்திய செங்கல் சூளை அதிபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணை தாக்கி காரில் தூக்கிபோட்டு சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News