தமிழ்நாடு

பழங்குடியின கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது- மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-05-24 04:08 GMT   |   Update On 2024-05-24 04:08 GMT
  • சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன.
  • கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த மழை கொட்டியது.

இதனால் ஊட்டி படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஊட்டி நகரின் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

ஊட்டியில் இருந்து தூனேரி செல்லும் சாலையின் குறுக்கே சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் மழைக்கு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதேபோல் குன்னூர், எடப்பள்ளி, பாரஸ்டேல், பந்துமை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

கூடலூர் பகுதியிலும் நேற்று மழை பெய்தது. மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப வழிகின்றன.

கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.

தகவல் அறிந்த கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், அலுவலர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.

இதையடுத்து வருவாயத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News