சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குகிறது போர்டு நிறுவனம்
- இந்திய சந்தையில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பிப்பு.
தமிழகத்தில் போர்ட் மோட்டார் நிறுவனம் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் போர்டு கார் தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளை சந்தித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது, போர்ட் உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. அதன்படி, மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை போர்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக போர்ட் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.
சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.