முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.
- பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98). இவர் முதுமை காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சினிமா பட நிர்வாகியாக இருந்த இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1983-87 கால கட்டங்களில் பவர்புல் அமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் அமைச்சரவையிலும் அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவர்.
அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார். அதன் பிறகு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். ஆனாலும் அவரது அரசியல் பயணம் அந்தளவுக்கு எடுபடவில்லை.
வயதான காரணத்தால் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திருமலை பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஆர்.எம்.வீரப்பன் நடுவில் சில ஆண்டுகள் கோபாலபுரத்தில் புது வீடு கட்டி அங்கு வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள வீட்டுக்கு வந்து விட்டார்.
சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை நேற்று மோசம் அடைந்தது. இதனால் மதியம் அவரது உயிர் பிரிந்தது.
ஆர்.எம். வீரப்பன் மரணம் அடைந்த தகவலறிந்ததும் அனைத்து கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார் மற்றும் சைதை துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வந்து ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எம். வீரப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மின் மயானம் சென்றடைந்ததும், நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் எரியூட்டப்பட்டது.