கருணாநிதியால் உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்பதா?: முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்
- கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
- முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.
எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.
ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.
இவ்வாறு அவர் கூறினார்.