தமிழ்நாடு

கைதான 4 பேர் - மீட்கப்பட்ட சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாத் (உள்படம்)

பண விவகாரத்தில் சினிமா பட தயாரிப்பாளர் கடத்தல்- கைதான 4 பேர் கிருஷ்ணகிரியில் சிறையில் அடைப்பு

Published On 2023-07-18 08:19 GMT   |   Update On 2023-07-18 08:19 GMT
  • கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் சினிமா பட தயாரிப்பாளர்.
  • கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பண விவகாரத்தில், தங்கும் விடுதியில் இருந்து சினிமா பட தயாரிப்பாளரை ஆம்னி வேனில் கடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தது.

கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (வயது 36). சினிமா பட தயாரிப்பாளர். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சினிமா படம் எடுப்பது தொடர்பாக வந்த அவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார்.

அப்போது 4 பேர் அங்கு ஆம்னி வேனில் வந்தனர். அவர்கள் கிருஷ்ண பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் தாங்கள் வந்த ஆம்னி வேனில் அவரை கடத்தி சென்றனர். இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் போலீசார் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வடக்கு பேட்டை அத்தாணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாஷ் இருந்தது தெரிய வந்தது.

அவரை மீட்ட போலீசார் அவரை கடத்தியதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன் (43), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), அருண் (21), ஆம்னி வேன் டிரைவர் சிவசக்தி (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலைய எல்லை என்பதால் கிருஷ்ணகிரி போலீசாரிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாசிடம் விசாரணை நடத்தினார்கள்.

கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு சினிமா படப்பிடிப்புக்காக இடம் தேர்வு செய்வதற்காக வந்தார்.

அந்த நேரம் அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கொத்தமங்கலத்தை சேர்ந்த சிவசக்தி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் 3 பேரும் கிருஷ்ண பிரகாசிடம், தாங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்கள். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பணமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டாகியும் அவர்களை கிருஷ்ணபிரகாஷ் படத்தில் நடிக்க வைக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.

கைதானவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News