கன்னியாகுமரியில் கடல் சீற்றம்- பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின
- இன்று காலை அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவானது.
- கன்னியாகுமரியில் இன்று பகல் 11 மணியளவில் சூறைக்காற்று வீசியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கடல் பகுதி, கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மழை போன்றவற்றால் அவ்வப்போது சீற்றமாக காணப்படுகிறது. அந்த நேரத்தில் ராட்சத அலைகள் வீசி வருகின்றன. சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி சுற்றுலா பயணிகளை பயமுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவானது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. குமரி மாவட்ட மேற்கு கடற்பகுதிகளில் சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள், கடல் அலை தடுப்புச் சுவரில் மோதிச் சென்றன.
நீரோடி முதல் பொழியூர் வரையிலான கடற்கரை கிராமச் சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று பகல் 11 மணியளவில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடல் சீற்றமாக காணப்பட்டது.