தமிழ்நாடு (Tamil Nadu)

ஆயுதங்களுடன் கைதான 13 பேர் கொண்ட கும்பல்- முக்கிய பிரமுகருக்கு குறி வைத்தது அம்பலம்

Published On 2024-10-18 05:42 GMT   |   Update On 2024-10-18 05:44 GMT
  • காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.
  • முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கடந்த 15ம் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர்-திருச்சி சாலையில் வருவதாக தகவல் கிடைத்தது. உடனே பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

பின்னர் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்ற போது, அந்த கார் வேகமாக சென்று பேரி கார்டில் மோதி நின்றது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசாரை பார்த்து நான் பெரிய ரவுடி நான் தான் குமுளி ராஜ்குமார் என் காரையே நிறுத்துவீங்களா என கேட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் தனிப்படை போலீசார் பரமக்குடி அருகே ஆதி ஏந்தல் பகுதியில் குமுளி ராஜ்குமார் (வயது 45) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இன்கானூர் பாலு என்கிற பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் குமுளி ராஜ்குமார் காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.

கைதான குமுளி ராஜ்குமார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்கு, தலா 2 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர் திருச்சி போலீசாரிடம் சிக்கினார்.

அவரைப் பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜ்குமார். தனது 16 வயதில் டீக்கடைக்காரர் ஒருவரின் மண்டையை உடைத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் தச்சநல்லூர் பகுதியில் இருந்து தப்பி தேனி மாவட்டம் குமுளிக்கு சென்றார்.

அங்கு நண்பர்களுக்காக அடிக்கடி தகராறு ஈடுபட்டார். கடந்த 1999 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. பின்னர் 2010-ல் ராஜ்குமார் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கி அதற்கு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆங்காங்கே ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் திருச்சியில் சிக்கியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து குமுளி ராஜ்குமாரின் ஆதரவாளர்களான மாகாளிக்குடி அலெக்ஸ், அருண், சமயபுரம், ராமு, லட்சுமணன், துறையூர், வெங்கடாசலபதி,கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசாரும், சக்திவேல் குளித்தலை பொன்னடி சங்கீத்குமார் ஆகிய 3 பேரை முசிறி போலீசாரும் கைது செய்தனர். மேலும் சோமரசம்பேட்டையில் கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தம் ஆதரவாளர்கள் 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாக தனி படை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News