தமிழ்நாடு

கொள்ளை நடந்த வீட்டை காணலாம்.

வானூர் அருகே ஒரே நாளில் 5 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-11-25 05:28 GMT   |   Update On 2022-11-25 05:28 GMT
  • ஒரே தெருவில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  • வீட்டில் இருந்த நகை பணம் மாயமானதை கண்டு வானூர் போலீசில் புகார் செய்தனர்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள புளிச்சப்பள்ளம் மேட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி ஜெயம் (வயது 55). நேற்று இரவு கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கினர்.

அப்போது மர்ம நபர்கள் அங்கு வந்தனர். வீட்டுக்கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளே சென்றனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஜெயம் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல்போட்டார். உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து இருளில் ஓடி மறைந்தனர்.

சிறிதுநேரம் கழித்து அதே பகுதியில் உள்ள வேலு என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த ரூ.5 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதேபோல அந்த தெருவில் ராஜன் வீடு உள்பட 3 வீடுகளிலும் நகை பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

ஒரே தெருவில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகை பணம் மாயமானதை கண்டு வானூர் போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது ஜெயம் வீட்டில் கிடந்த கடப்பாரையை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News