விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
- அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் கூறுகையில், 'தங்க நாணயத்தின் ஒரு பகுதி இதழ்கள் வடிவிலும், மறுபகுதியில் புள்ளி கோடுகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் தங்க ஆபரணம் போன்று தங்க நாணயத்தையும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் செய்துள்ளனர். 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
இந்த தங்க நாணயத்தை பார்க்கும்போது முன்னோர்கள் அதிகமாக ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.