மணமகன் திடீர் மாயம்: நின்று போன திருமணம்
- இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
- திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.