அதிமுக- பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்
- அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
- யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக பாஜக குழுவில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை என பலரும் கூறுகின்றனர். அது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காததால் விஜய்யை கண்டு தி.மு.க பயப்படுகிறதா என்றால், யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜயை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று தோன்றுகிறது.
விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அது தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும்.
அ.தி.மு.க.வில் நான் பெரும் பதவியில் இருந்து விட்டு பா.ஜனதாவில் வந்து இணைந்தேன். எனக்கும் கட்சி பதவி இல்லாமல் இருந்தது. தற்போது சட்டமன்றக்குழு தலைவராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட போது அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.