வாங்கிய கடனை திருப்பி கேட்டு கடும் நெருக்கடி- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தலைமறைவாகும் பெற்றோர்
- தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
- வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.
அதில் தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் 10-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல் செய்யும் நபர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் கடும் நெருக்கடியோடு கடன் தொகை திருப்பி கேட்பதால் அவர்கள் கால அவகாசம் கேட்டு வந்தனர்.
கால அவகாசம் தர இயலாததால் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல்தாரர்கள் இரவு பகல் முழுவதும் அங்கேயே முகாமிட்டு கடன் தொகையை திருப்பி கேட்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் கடன் வாங்கிய குடும்பத்தினர் அதிகாலையிலேயே நிதி நிறுவனங்களில் இருந்து வசூல்தாரர்கள் வந்து விடுவார்கள் என்ற பீதியில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ணை வீடுகளில் தங்களது குழந்தைகளுடன் பயந்து தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.
பின்னர் மீண்டும் நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வரும் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் அதிகாலையிலேயே தலைமறைவாகிவிடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. பெற்றோர்களின் இந்த நிலைமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த வாரம் அப்பகுதி பொதுமக்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து தப்பிக்கவும், கடன் தொகை செலுத்துவதற்கு ஏதுவாக எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தருமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தான் வேலைக்கு செல்வதன் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை.
இதனால் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை ஏன் அனுப்பவில்லை என்று செல்போன் மூலம் ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். எனவே எங்களுக்கு 6 மாத காலம் கால அவகாசம் வேண்டும். நாங்கள் கடனை திருப்பி செலுத்தி விடுகிறோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசம் வாங்கி கொடுப்பதோடு, கடன் வாங்கிய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.